நீங்கள் முட்டையை விரும்பி சாப்பிடுபவரா? அப்படியென்றால், காலையில் அதை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்; உடல் எடை கூடிவிடும் என்று புலம்ப வேண்டாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.இதுபற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறியதாவது :
“பொதுவாக காலை உணவுடன் முட்டை சேர்த்துக்கொள்வதால் நம் உடலுக்கு அதிக அளவிலான புரோட்டீன் கிடைக்கிறது. அது, நம் உடலின் சக்தியை நீட்டிக்கச் செய்வதோடு, நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வை தருகிறது.
அதனால், மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி நேரத்தில் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவை நாம் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த வழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலில் சேரும் கலோரிகளின் அளவு குறைக்கப்படும். இது தொடரும் பட்சத்தில் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வது, அதாவது எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும்” என்றனர்.
மேலும் அவர்கள் இதுபற்றி கூறும்போது, “நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்குமே நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவு முறையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்த தகவல் எங்களுக்கு தெரிய வந்தது” என்று தெரிவித்தனர்.
தானியங்கி மாலுமி!
கடலில் செல்லும் கப்பல்களில் மனித மாலுமியுடன் `தானியங்கி மாலுமி’யும் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா?
இந்தத் தானியங்கும் மாலுமி, கப்பலைத் துல்லியமாக சரியான பாதையில் செலுத்துகிறது. இது மனித மாலுமியைவிட திறமையாக வேலை செய்கிறது. இதை நவீன சுழல் காம்பசுடன் இணைக்க வேண்டும்.நவீன சுழல் காம்பஸ் சிறு தட்டச்சு எந்திரம் அளவுதான் இருக்கும். கப்பலின் ஆட்டம் அதைப் பாதிக்காது. கப்பலின் அளவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அந்தக் காம்பஸ் போதுமானது.
தானியங்கி மாலுமியில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை உத்தரவாகப் பதிந்து விட்டால், அதன்படி கப்பலைச் செலுத்தும். ராடார் மூலம் உத்தரவு கொடுப்பதற்கேற்ப கப்பலை ஓட்டும் தானியங்கி மாலுமியும் உண்டு. ராடாரின் உத்தரவுக்கேற்ப தானியங்கி மாலுமி கப்பலைச் செலுத்தும்.
அவ்வப்போது கடலின் நிலைமையை அனுசரித்து இந்தத் தானியங்கி மாலுமி மனித மாலுமியைப் போல் வேலை செய்யும் ஆற்றல் கொண்டது. தானியங்கி மாலுமி பொருத்தப்பட்டு, முதன்முதலில் தானியங்குக் கப்பலாக பயணம் செய்தது `மோர்ம கார்கோ’ என்ற 12 ஆயிரம் டன் எடையுள்ள அமெரிக்கக் கப்பல். அது 1964-ல் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்குச் சென்றது.
அதன்பின்னர் இரண்டாண்டுகள் கழித்து, 65 ஆயிரம் டன் எடை உள்ள பிரெஞ்சுக் கப்பல் எஸ்.எஸ்.டோலபெல்லா, தானியங்கு வசதியால் செயின்ட் நசயேர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. அதில், கப்பலைச் செலுத்துவதற்கான சக்தி உற்பத்திச் சாதனமும் தானியங்கு முறையில் அமைக்கப்பட்டிருந்தது.
பசுமை நகரம்
ஜப்பானியர்கள் பீனிக்ஸ் பறவையைப் போன்றவர்கள். சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட போதிலும், அதில் இருந்து போராடி மீண்டு வருகிறார்கள். இந்த பூகம்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் பல்வேறு பாடங்களை கற்றுக்கொண்ட அவர்கள், அதை பயன்படுத்தி அதி நவீன பசுமை நகரங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சியில் அந்த நாட்டில் உள்ள பல்வேறு கட்டுமான நிறுவனங்களும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.
ஜப்பானில் உள்ள பானாசோனிக் உள்பட 8 நிறுவனங்கள் இணைந்து புதிய பசுமை நகரம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளன. சுமார் 19 ஹெக்டேர் பரப்பளவில் இந்த நகரம் அமைய உள்ளது. இயற்கையாக கிடைக்கும் எரிபொருளைப் பயன்படுத்தியே இந்த நகரம் இயங்கும்.
உதாரணமாக சூரிய ஒளி, காற்று சக்தி போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரமே இங்கு பயன்படுத்தப்படும். இந்த நகருக்குள் இயங்கும் வாகனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் மட்டுமே ஓடும். வீடுகளுக்கு தேவையான மின்சாரம் மற்றும் பிற எரிபொருட்களும் சூரிய சக்தியில் இருந்தே தயாரிக்கப்படும். இதற்கு ஏற்ப வீடுகள் அனைத்திலும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும். இது தவிர இந்த நகரைச்சுற்றிலும் ஏராளமான மரம், செடிகள் வளர்க்கப்படும். மொத்தத்தில் இந்த நகரத்தில் இருந்து வெளியேறும் கார்பன்டை ஆக்சைடின் அளவு மிகமிக குறைவாகவே இருக்கும். இதன் மூலம் இயற்கை மற்றும் சுற்றுசூழல் பாதுகாக்கப்படும்.சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் வகையில் உருவாகும் இந்த புதிய நகரம் வருகிற 2014 ம் ஆண்டு முதல் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதி நவீன வசதிகள் கொண்டதாக இருக்கும் வகையில் உருவாகும் இத்தகைய புதிய நகரங்கள் மக்களை வெகுவாக கவரும் என்பது கட்டுமான நிறுவனங்களின் எதிர்பார்ப்பாகும்.
நிலவில் இருந்து மின்சாரம்
உலக அளவில் உள்ள பிரச்சினைகளில் ஒன்றாக மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. அணு சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் உள்ள ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் மாற்று வழிகளில் மின்சாரத்தை தயாரிப்பது குறித்து உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
சூரிய ஒளி, காற்று, கடல் அலை போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவுகள் அதிகமாக இருப்பதால் இந்த முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி தரவில்லை.
இதற்கிடையில் ஜப்பானில் உள்ள விஞ்ஞானிகள், `பூமிக்கு தேவையான மின்சாரத்தை நிலவில் இருந்து கொண்டு வர முடியுமா?’ என்று ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற கட்டுமான நிறுவனமான ஷீமிஷூ கார்ப்பரேசன் இது தொடர்பான திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள திட்டம் இதுதான்…
நிலவின் மீது கணிசமான அளவு சூரிய வெளிச்சம் விழுந்து கொண்டே இருக்கிறது. இந்த சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும். பின்னர் அதை பூமிக்கு அனுப்ப வேண்டும். இந்த முறையில் 13 ஆயிரம் டெர்ரா வாட் அளவு மின்சாரத்தை தொடர்ந்து தயாரித்து பூமிக்கு அனுப்ப முடியும். இதன் மூலம் பூமியின் மின்சாரத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்.நிலவில் மின்சாரம் தயாரிக்கும் பணி மற்றும் அந்த மின்சாரத்தை பூமிக்கு அனுப்பும் பணி ஆகியவற்றில் ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றும் இதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும் என்பதும் அந்த நிறுவனத்தின் திட்டமாகும்.
தற்போது காகித அளவில் இருக்கும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது பற்றி அந்த நிறுவனம் விளக்கங்களையும் அளித்துள்ளது. மேலும் தற்போதுள்ள விண்வெளி மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த முயற்சியில் வெற்றி பெற முடியும் என்பது இந்த நிறுவனத்தின் கருத்தாகும்.
விண்மீன்களின் பரிணாம வளர்ச்சி….
பூமிப் பந்தின் உள்பகுதி உருகத்தொடங்கி இருப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு, ஓசோன் ஓட்டை ஆகியவற்றால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பூமியின் உள்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செபாஸ்டியன் ரோஸ் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
ஆராய்ச்சியில் தெரியவந்த தகவல்கள்:
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி, பூமியின் ஆழ்மைய பகுதியும் உருகத்தொடங்கி உள்ளது. பூமியின் இயக்கத்துக்கு தேவையான மின்காந்த அலைகள் இப்பகுதியில் இருந்துதான் கிடைக்கிறது. இதன் விட்டம் சுமார் 2,400 அடி. நிலா அளவுக்கு பெரிதானது.
இது மிக மிக கடினமானது. இப்பகுதியை சுற்றி வெளிப்புறம் இரும்பு, நிக்கல், அலாய் உள்ளிட்ட பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையுள்ள, பிரகாசமான போர்வை போன்ற உலோகக்கலவை திரவ நிலையில் உள்ளது. இயல்பு நிலை பாதிக்கப்படாமல் இப்பகுதியில் கன்வெக்ஷன் முறையில் வெப்பம், மற்றும் குளிர்தல் நிகழ்வு மாறிமாறி நடைபெறும்.
சீரான கன்வெக்ஷன் பூமி சுழற்சியை பாதிக்காது. இடர்பாடுகளால் கன்வெக்ஷன் முறையில் ஏற்படும் பாதிப்பு இப்பகுதியில் வெப்பத்தை அதிகரித்து பாதிப்படையச்செய்யும். இதனால் அங்கிருந்து வரும் மின்காந்த அலைகள் பாதிக்கப்பட்டு பூமி சுழற்சி உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே இந்த பாதிப்பை சரிசெய்ய முடியும்.
விண்மீன்களின் பரிணாம வளர்ச்சி….
சிவப்பு ராட்சதன்கள் என்பவை உண்மையில் ஒரு விண்மீனின் இறுதி கட்ட நிலை ஆகும். மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் எப்படி பிறப்பு, வாழக்கை மற்றும் இறப்பு என்று ஒரு பரிணாமம் உள்ளதோ, அதே போல விண்மீன்களுக்கும் கூட ஒரு பரிணாம வளர்ச்சி உள்ளது. இதை ‘விண்மீனின் பரிணாம வளர்ச்சி’ (Stellar Evolution) என்கின்றனர். இந்த பரிணாம வளர்ச்சியின் இறுதி கட்டங்களில் தான் ஒரு விண்மீன் சிவப்பு ராட்சதனாக மாறுகிறது.
ஒரு விண்மீனின் மையப் பகுதியில் நடைபெறும் அணுக்கரு வினைகள் (Nuclear Reactions) என்பவை தான் விண்மீனின் ஆற்றலுக்குக் காரணம் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதாவது ஹைட்ரஜனின் அணுக்கருக்கள் இணைந்து ஹீலியமாக மாறுகின்றன. இந்த ஹீலியம் மெதுவாக விண்மீனின் மையப்பகுதியில் அப்படியே கேரமாகி, ஒரு ஹீலியம் மையப்பகுதியை (Helium Core) உருவாக்குகிறது.
ஹீலியம் மையப்பகுதியில் சேகரமாகும் போது அதனைச் சுற்றியுள்ள வெளி சுற்றுப் பரப்பில் ஹைட்ரஜன் இணைவு வினைகள் நடக்கின்றன. காலப்போக்கில் இந்த மையப்பகுதி மிகவும் கனமானதாகவும், மிகவும் அழுத்தமானதாகவும் மாறுகிறது. (ஹீலியம் என்பது ஹைட்ரஜனை விடவும் கனமானதாகும்) மையப் பகுதியின் அழுத்தமும் கனமும் அதன் வெப்ப நிலையை முன்பு இருந்ததை விடவும் அதிகமாக மாற்றுகின்றன.
காலப்போக்கில் ஹீலியம் அணுக்கருவே இணைந்து மற்ற கணமான தனிம அணுக்களை உருவாக்குமளவுக்கு விண்மீனின் மையப்பகுதியில் வெப்பநிலையும் அழுத்தமும் அதிகமாகிறது. ஹீலியம் அணுக்கருக்கள் கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற கனமான அணுக்களாக இணையும் போது அபரிமிதமான வெப்ப ஆற்றல் விண்மீனினி மையப்பகுதியில் உருவாக்குகிறது.
இந்த ஹீலிய இணைவு (Helium Fusion) வினைகளால் வெளிப்படும் வெப்ப ஆற்றல் விண்மீனின் சுயஈர்ப்பு விசையை சமநிலைப்படுத்தத் தேவையான ஆற்றலை விட மிகவும் அதிகமாக உள்ளதால், விண்மீன் மெதுவாக விரிவடையத் தொடங்குகிறது.
எகிப்தில் தொலைந்த 17 பிரமிடுக்கள் கண்டுபிடிப்பு
எகிப்தில் நிலத்திற்கு அடியில் புதைந்துள்ள 17 பிரமிடுக்கள் 1000 கல்லறைகள் மற்றும் 3000 பண்டைய குடியேற்றங்கள் ஆகியன செய்மதி தொழிநுட்பத்தினால் கண்டுடறியப்பட்டுள்ளன.பேர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.இன்ப்ரா ரெட் இமேஜிங் ( infra red imaging )என்ற தொழிநுட்பத்தின் மூலமே இவை கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு
கண்டறியப்பட்டுள்ளவற்றில் 2 பிரமிடுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் நிலத்துக்கடியில் தோண்டி கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 400 மைல்கள் தொலைவிலுள்ள செய்மதியில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக்கருவிகள் மூலமே இவை இணங்காணப்பட்டுள்ளன. இப்புகைப்படக்கருவிகள் அதி சக்தி வாய்ந்தவை எனபதுடன் புவியின் மேற்பரப்பிலுள்ள 1 மீட்டருக்கும் குறைவான விட்டத்தை உடைய
பொருட்களையும் படம் பிடிக்கவல்லன. இது எகிப்திய வரலாற்றில் பாரிய மைல்கல்லாக கருதப்படுவதுடன் இத்தகைய பல பண்டைய கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்படலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பிரபஞ்ச கண்ணாடிகள்……
தொலை நோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் மனிதன் விண்வெளியைப் பற்றி நிறைய தகவல்களை அறியஆரம்பித்தான். தொலை நோக்கி 1609 ஆம் ஆண்டு கலிலியோ என்ற இத்தாலிய வானியல் வல்லுனரால் கண்டுபிடிக்கப்பட்டது. தொலைநோக்கி (Telescope) என்பது வேறு ஒன்றும் இல்லை. அது நம்முடைய கண்ணைப் போல ஒரு பெரிய அளவான கண் அவ்வளவுதான்.
நம் மனித கண்ணின் மணியை (Pupil) விட பல மடங்கு பெரியதாக இருப்பதால், அது தன்னுடைய மிக அதிகமான பரப்பளவில் ஒளியை வாங்கி அதை ஒரே இடத்தில் குவிக்கிறது. அப்போது இந்தப் பொருள் நம் கண்ணால் காண்பதை விடளவும் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது. நாம் வெறுங்கண்ணால் பார்க்கும் போது விண் வெளியில் வெறும் 6000 விண்மீன்களைத்தான் காண முடிகிறது. தொலைநோக்கி என்பது ஒரு பொருளிலிருந்து போதுமான அளவு ஒளியை சேகரித்து அதை குவிப்பதால், நம் கண்களுக்குத் தெரியாத மங்கலான விண்மீன்களைக் கூட தொலை நோக்கி காட்டி விடுகிறது.
கலிலியோ 1609 ஆம் ஆண்டு முதன் முதலில் தான் கண்டுபிடித்த தொலைநோக்கியின் மூலமாக வானத்தைப் பார்த்த போது விண்ணில் மனிதனின் கண்களுக்குப் புலப்படாத, மங்கலான விண்மீன்களைக் கண்டு வியப்படைந்தார். சர் ஐசக் நியூட்டன் என்ற ஆங்கில விஞ்ஞானி ஒளியை வெவ்வேறு நிறங்களாக முப்பட்டகக் கண்ணாடி (Prism) வழியாக செலுத்திப் பிரித்துக் காட்டினார். அவர் சூரிய ஒளிக் கதிரை கண்ணாடியாலான முப்பட்டகக் கண்ணாடி வழியாக (முக்கோணம் போன்ற வடிவமுடையது) செலுத்திய போது, அந்த ஒளியானது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் ஊதா என்கிற ஒளிப்பட்டைகளாகப் பிரிந்ததைக் கண்டார்.
அதாவது நாம் காணும் சூரிய ஒளி என்பது தூய்மையான வெந்நிற ஒளி (White Light) அல்ல, அது பல விதமான ஒளிக்கதிர்களின் மொத்தக் கலவை தான் என்று நியூட்டன் நிரூபணம் செய்தார். இந்த ஒவ்வொரு ஒளிக்கதிரும் குறிப்பிட்ட அலை நீளத்தைக் (Wave Length) கொண்ட அலைகளாக உள்ளன. முப்பட்டகக் கண்ணாடி என்பது எல்லா நிறங்களும் கலந்து ஒன்றான வெண்மை நிற ஒளியை அதன் தனித்தனியான நிறங்களாகப் பிரிக்கிறது.
விண்வெளியில் விவசாய பண்ணை!
சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை அமைப்பதில் ஜப்பான் விஞ்ஞானி தீவிரமாக உள்ளார். அமெரிக்கா, ரஷ்யா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நடுவானில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்து வருகின்றன. சோயுஷ் விண்கலம் மூலம் சென்று அங்கு ஆய்வகம் (பரிசோதனை கூடம்) அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் காய்கறிகளை பயிரிட திட்ட மிட்டுள்ளன. இந்நிலையில் நாளை (புதன்கிழமை) சோயுஷ் விண்கலம் முலம் விண்வெளி வீரர்கள் சதோஷி புருகவலா (ஜப்பான்),
செர்ஜி வல்கோவ் (ரஷியா), மைக்கேல் போசும் (அமெரிக்கா) ஆகியோர் சர்வதேச விண்வெளி மையம் புறப்பட்டு செல்கின்றனர். அதற்காக கஜகஸ்தானில் உள்ள பைகாணர் விண்வெளி தளத்தில் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் ஜப்பான் விண்வெளி வீரர் சதோஷி புருகவலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாளை புறப்பட்டு செல்லும் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதம் தங்கி ஆய்வக பணியை மேற்கொள்ள இருக்கிறோம். அப்போது அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் வெள்ளரிக்காய் பயிரிட்டு அறுவடை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை அங்கேயே அவர்கள் உற்பத்தி செய்ய முடியும் என்றார். மேலும் அவர் கூறும்போது, விண் வெளியில் எங்களால் வெள்ளரிக்காய்களை சாப்பிட முடியும். ஆனால் அதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை என்று நகைச்சுவையுடன் கூறினார். ரஷிய விண்வெளி வீரர் செர்ஜி வால்கோவ்
கூறும்போது, விண்வெளி மையத்தில் சாலட் தயாரிக்க அனுமதி அளித்தால் அங்கு தக்காளியை உற்பத்தி செய்ய வும் தயாராக இருக்கிறோம். எனக்கு வறுத்த உருளைக்கிழங்கும் சாப்பிட பிடிக்கும் என்று நகைச்சுவை உணர்வுடன் கூறினார்
அகச்சிவப்புக் கதிர்களில் இருந்து மின்சாரம்!
சூரியனில் இருந்து வெளிப்படும் அகச்சிவப்புக் கதிர்களில் இருந்தும் மின்சாரம் தயாரிப்பதற்கான புதுவழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதுதொடர்பான ஆய்வை அமெரிக்கா ரைஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.ஆய்வாளர்களில் ஒருவரான, மின்னியல் மற்றும் கணினிப் பொறியியல் பேராசிரியர் நவோமி ஹாலாஸ் கூறுகையில், “தற்போது சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்கான சிலிக்கான் பேனல்களில் அகச்சிவப்புக் கதிர்களைக் கண்டுபிடித்து ஈர்ப்பதற்கான வழி இல்லை. எனவே, நாங்கள் அதில் நானோ ஆன்டெனாக்களை செமி கண்டக்டருடன் இணைத்து அகச்சிவப்புக் கதிர்களில் இருந்து மின்சாரம் தயாரிக்க வகை செய்திருக்கிறோம். இதன்மூலம், அதிகத் திறன் வாய்ந்த சூரியசக்தித் தகடுகளை உருவாக்கலாம்” என்கிறார்.
பூமிக்கு வரும் சூரிய சக்தியில் மூன்றில் ஒரு பங்கு, அகச்சிவப்புக் கதிர்களாகும். ஆனால், இன்று பெரும்பாலான சூரியசக்தித் தகடுகளில் பயன்படுத்தப்படும் பொருளான சிலிக்கானால் அகச்சிவப்புக் கதிர்
களின் சக்தியை ஈர்க்க முடிவதில்லை.
அகச்சிவப்புக் கதிர்கள் போன்ற குறிப்பிட்ட அலைநீளத்துக்குக் குறைவாக உள்ள வெளிச்சக் கதிர்கள், மின்சக்தி உற்பத்திக்குப் பயன்படாமல் சாதாரண சூரியசக்தித் தகடுகளைக் கடந்து சென்றுவிடுகின்றன. அந்த நிலையைத் தங்கள் கண்டுபிடிப்பு மாற்றுகிறது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
தங்களின் கண்டுபிடிப்பைக் கொண்டு, அதிதிறன் வாய்ந்த சூரியசக்தித் தகடுகளை பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும், அவற்றின் மூலமாக அதிக அளவில் சூரியசக்தி மின்சாரத்தைத் தயாரிக்க முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து முனைப்பாக நடைபெற்று வருகின்றன.
டால்பினின் அதிசயங்கள் !
மீன் இனத்தைச் சேர்ந்த டால்பினைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இது தண்ணீருக்கு மேல் எழும்பி மனிதர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டும். டால்பினுக்கு குரல்வளை கிடையாது. ஆனாலும் காற்றை ஊதி, 32 வெவ்வேறு விதமான ஒலிகளை எழுப்புகிறது.
இதுவும் வவ்வாலைப் போல ஒலி அதிர்வுகளைக் கொண்டு பயணம் செய்கிறது. தண்ணீருக்குள் 15 மைல்களுக்கு அப்பால் இருந்து எழும் ஒலியையும் கேட்கக்கூடிய அளவுக்குக் கேட்கும் திறன் கொண்டது.டால்பின்கள் கூட்டமாகவே வாழும். கஷ்டம் நேரும்போது தம் கூட்டத்தை விட்டுக் கொடுக்காது. ஒரு டால்பினுக்கு காயம் ஏற்பட்டுவிட்டால் அதை தமது மூக்கில் தாங்கி, நல்ல காற்றைச் சுவாசிப்பதற்காக நீர் மட்டத்துக்குக் கொண்டு வரும்.
நீரில் வாழ்ந்தபோதும் டால்பின்கள் குட்டி போட்டுப் பாலூட்டுபவை. குட்டி பிறந்ததும் தாய் அதைத் தன் மூக்கில் தாங்கி தண்ணீருக்கு வெளியே கொண்டு வரும். அப்போதுதான் குட்டியால் சுவாசிக்க முடியும். இப்பழக்கம் இயல்பாகவே அதனிடம் அமைந்துவிட்டது.
மனிதர்கள் இடும் சில கட்டளைகளை டால்பின்கள் புரிந்துகொள்கின்றன. இவற்றைப் பேசவைக்க முடியுமா என்று தற்போது முயற்சி செய்துவருகிறார்கள்.
மருந்துக்கு உதவும் விலங்குகள்!
மருந்தாகப் பயன்படக்கூடிய ஒரு புரதத்தைக் கண்டுபிடிப்பது சுலபமான காரியம்தான். ஆனால் அதைப் பெருமளவில் உற்பத்தி செய்வது மிகவும் சிரமமாக இருக்கிறது.
மருந்துகளாகச் செயல்படக்கூடிய புரதங்களால் பெரும்பாலானவை பெரியவையாகவும், சிக்கல் நிறைந்தவையாகவும் இருப்பதால், அவற்றை மரபியல் மாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியாக்களின் உதவியுடன் உற்பத்தி செய்வது முடியாத காரியமாகவே இருக்கிறது. எனவே, விஞ்ஞானிகள் விலங்கு செல்களின் உதவியை நாடியிருக்கிறார்கள்.மனிதப் புரதங்களை பாலூட்டிகளின் செல்களை வளர்க்கக் கூடிய வளர் ஊடகங்களில் (Cultures) வைத்து உற்பத்தி செய்ய முடியும். ஒரு புரதத்தை உருவாக்கும் சங்கேதக் குறிப்புகள் அடங்கிய ஜீன்களை விலங்கு செல்களுக்குள் புகுத்தி, அவற்றைச் சத்துப்பொருட்கள் அடங்கிய வளர் ஊடகக் கரைசல்களில் கலந்து விடுவார்கள்.
அவை, பெரும் உலோகப் பீப்பாய்களில் நுரைத்துக் கொண்டிருக்கும். அவற்றுக்கு உயிரியல் வினைக்கலங்கள் (Bio reactors) என்று பெயர். ஆனால், இத்தகைய கலங்களில் செல்கள் மிகச் சிறிய அளவுகளிலேயே புரதங்களை உற்பத்தி செய்கின்றன. அத்துடன் பாலூட்டி விலங்கு செல்கள் வளர் ஊடகங்களில் விரைவாகப் பல்கிப் பெருகுவதில்லை. மேலும், இத்தகைய உயிரியல் வினைக்கலங்களை நிறுவுவதற்கும், இயக்குவதற்கும் பெருஞ்செலவு ஏற்படுகிறது.
பயனுள்ள சில மனிதப் புரதங்களை உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் இரண்டு புதிய உத்திகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஒன்றில் வைரஸ்களும், மற்றதில் ஆடுகளும், பசுமாடுகளும் உதவுகின்றன.
குச்சி வைரஸ்களில் (Baculo viruses) 30-க்கும் மேற்பட்ட மனிதப் புரதங்களுக்கான உற்பத்திக் குறிப்புகளை புகுத்துவதில் வெற்றி ஏற்பட்டிருக்கிறது. `மைக்ரோ ஜெனிசிஸ்’ என்ற அமெரிக்க நிறுவனம் இம்முறையைப் பயன்படுத்தி எஸ்ட்ஸுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருக்கிறது.
சுண்டெலிகளின் உடலில், `திசு பிளாஸ்மினோஜென் தூண்டி’ (சுருக்கமாக `டி.பி.ஏ.’) என்ற மனிதப் புரதத்தை உற்பத்தி செய்வதில் இன்னொரு குழு வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், சுண்டெலி களின் உடம்பிலிருந்து அதிக டி.பி.ஏ.வைப் பெற முடியாது.
எனவே, இன்டக்ரேட்டட் ஜெனிடிக்ஸ் என்ற நிறுவனம் இப்போது அதே உத்தியை ஆடுகளில் செயல்படுத்த முயன்று வருகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால் ஒரு லிட்டர் ஆட்டுப் பாலில் இருந்து சுமார் 10 கிராம் டி.பி.ஏ.வை பெற முடியும்.
ஆடுகளைவிடப் பசுமாடுகள் பத்து மடங்கு அதிகமான பாலைத் தருகின்றன. ரோரர் பார்மசூட்டிகல்ஸ் என்ற அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனம், பசுமாடுகளின் மடியில் மனிதப் புரதங்களை உற்பத்தி செய்ய முயன்றுவருகிறது.


No comments:
Post a Comment